மாணவர்கள் தயாரித்த மின்கடத்தி
மேற்குவங்க மாநிலம் மத்யம்கிராமிலுள்ள சோதேபூர் தேசபந்து வித்யாபீட பள்ளி மாணவர்கள் குறைந்த செலவில் அதிக திறனுள்ள மின்னல் கடத்தி ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த மாணவர்கள் இயற்பியல் ஆசிரியர் பசுபதி மண்டல் வழிகாட்டுதலில் வீட்டு உபயோகப் பொருட்கள், மெக்கானிக் ஷெட் கழிவுப் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு முன்மாதிரியை தயாரித்துள்ளார்கள். ஒரு மெல்லிய அலுமினிய தகட்டை அடியாகவும் சைக்கிள் சக்கரம் போன்ற ஒன்றை சட்டகமாகவும், அதிலுள்ள துளைகளில் தாமிர கம்பிகளை நுழைத்து குறுக்கு கம்பிகளாகவும் பயன்படுத்தியுள்ளனர். இவற்றுடன் பூமிக்குள் புதைக்கப்பட்ட ஒயர்களை ஒரு மய்ய அச்சின் மூலம் இணைத்துள்ளார். இதற்கு முதலில் ரூ350 மட்டுமே செலவானது. இந்த மாதிரியை மய்ய ஆய்வு சோதனை சாலைகளில் பரிசோதனை செய்து பின்னர் மேம்படுத்தியபோது ரூ.1000 ஆனது. இப்போது சந்தையில் கிடைக்கும் மின்கடத்திகளின் விலை ரூ.2100. எனவே கிராமப்புற மக்களும் விவசாயிகளும் வாங்க முடியாதவாறு உள்ளன. மேலும் அவற்றில் கடத்தும் முனைகளும் குறைவாகவே உள்ளன. இந்த மாணவர்கள் தயாரித்துள்ள கடத்தியில் 450-500 கூர்மையான முனைகள் உள்ளன; எனவே செலவு குறைவானதும், நடைமுறைரீதியானதும், அதிக எண்ணிக்கையில் தயாரிக்கக் கூடியதாகவும் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதிகளில் பயன்படக்கூடியதாகவும் உள்ளது. தேசிய சிறார் அறிவியல் மாநாட்டில் பரிசு பெற்றுள்ளது. மத்திய ஆற்றல் ஆய்வு கழகத்தில் சோதனை செய்யப்பட்டு அதனையுடைய திறனும் பாதுகாப்பு அம்சமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை வடக்கு வங்க பகுதியில் 40 இடங்களில் நிறுவுவதற்கு மேற்குவங்க ரேடியோ கழகம் உதவி செய்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்புக்கு பேடன்ட் உரிமை பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாம். இந்தியர்களின் சாதுர்யத்திற்கும் இளம் மனங்களின் அளவற்ற ஆற்றலுக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.
பவள பாறைகளை பாதுகாக்க ஒரு முயற்சி
பருவநிலை மாற்றத்தை சரி செய்யாவிட்டால் முதலில் அழிய போவது ஆஸ்திரேலியாவிலுள்ள பெரும் பவள பாறைகள்தான்(Great Barrier Reef-GBR) என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனை எதிர்கொள்ள முக்கியமான சில பவளப் பூச்சி இனங்களின் இலட்சக்கணக்கான செல்களை திரவ நைட்ரஜன் அடங்கிய கலன்களில் சேமித்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பெருங்கூட்ட இனப் பெருக்கத்தின் போது இந்த செல்கள் சேகரிக்கப்பட்டன. சிதைந்தும் அழிந்தும் வருகின்ற பவள இனத்தை புத்துயிரூட்ட இது ஒரு வாய்ப்பு என்கிறார்கள். “சாராம்சத்தில் அவற்றின் உயிர் சுழற்சியை சற்று நிறுத்தி வைத்திருக்கிறோம்” என்கிறார் ஆஸ்திரேலிய இயற்கை பாதுகாப்பு கழகத்தின் மேலாளர் ஜஸ்டின் ஓ பிரையன். இந்த திட்டம் 2011இல் தொடங்கப்பட்டதாம். இனப் பெருக்க காலத்தில் பவள பூச்சிகள் சினை முட்டைகளையும் விந்துக்களையும் தண்ணீரில் விடுகின்றன. அப்போது விஞ்ஞானிகள் விந்துக்களை சேகரித்து செல்லின் உள்கட்டமைப்பு சேதமடையாமல் உறைவேதிப்பொருட்களில் பாதுகாக்கப்படுகின்றனர். சினை முட்டைகளில் அதிகமான தண்ணீரும் கொழுப்பும் இருப்பதால் அவற்றை இவ்வாறு பாதுகாக்க இயலாதாம். விந்துவுடன் மற்ற செல்களையும் சேகரித்து பாதுகாக்கிறார்கள். மைனஸ் 196 செல்சியஸ்(மைனஸ் 320 F) வெப்பத்தில் திரவ நைட்ரஜனில் இருக்கும் இவற்றின் கருத்தரிக்கும் தன்மை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் அப்படியே இருக்குமாம். வேண்டும்போது அவற்றை உருக வைக்கலாம். பெரும் பவள பாறையில் காணப்படும் 400 வகையில் இதுவரை 34 வகைகளை சேகரித்துள்ளார்கள். பவளப்பாறையின் கட்டமைப்பிற்கும் செயல்பாட்டிற்கும் மிகவும் அத்தியாவசியமான வகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவுபடுத்த திட்டம் உள்ளதாம். கடல் வெப்பமாதலால் பவளப்பூச்சிகளுக்கு நிறத்தையும் உணவையும் அளிக்கும் பாசிகள் வெளியேற்றப்படுகின்றன. அதன் பிறகு பவளம் நோய்வாய்ப்பட்டு உணவில்லாமல் அழிந்து விடுகின்றன. இப்போது உள்ள வெப்பத்திற்கு மேல் 1.5 டிகிரி சூடானாலே 70% பவளங்கள் அழிந்துவிடுமாம். பவளங்கள் கடல் வாழ் உயிரினங்களுக்கு மட்டுமல்ல கடலோரத்தில் வாழும் மனிதர்களுக்கும் உணவளிக்கின்றன; புயலிலிருந்து காப்பாற்றுகின்றன; மீன்பிடித்தல், சுற்றுலா போன்றவற்றின் மூலம் வாழ்வாதாரங்களை அளிக்கின்றன. பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றிலுள்ள 84% பவள இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவாம். அதிகம் சுரண்டப்பட்டு மாசுபடுத்தப்படும் கடலை பாதுகாக்க பாரிசில் கூடப் போகும் ஐ நா கடல் மாநாட்டில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட வேண்டும். (சயின்ஸ் அலெர்ட்)
வயலின் வடிவில் எதிர்கால தொழில்நுட்பம்
இங்கிலாந்து நாட்டிலுள்ள லவ்பாரோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயற்பியலாளர்கள் மயிரினும் மெல்லிய வயலின் கருவியை வடிவமைத்துள்ளார்கள், இது இசைப்பதற்காக அல்ல. அடுத்த தலைமுறை மின்னணு கருவிகளை எவ்வாறு உண்டாக்கலாம் என்பதற்கான வரைபடமாம். திண்ணிய அச்சில் நுண்ணிய வடிவங்களை தீட்டும் நானோ லித்தோகிராஃபி(nanolithography techniques) முறையில் இது உண்டாக்கப்பட்டுள்ளது. இந்த வயலின் நான்கு கட்டங்களில் உண்டாக்கப்பட்டது. முதலில் பாலிமர் தடவப்பட்ட ஒரு அச்சில்( chip) மிக மிக நுண்ணிய ஊசியால் வயலின் போன்ற வரைபடங்கள் தீட்டப்பட்டன. இரண்டாவது கட்டத்தில் வரையப்பட்ட பாலிமர் பகுதிகள் கரைக்கப்பட்டன. மூன்றாவதாக புதிதாக உண்டான பள்ளங்களில் பிளாட்டினம் நிரப்பட்டது. இறுதி பகுதியில் அச்சும் மீதமுள்ள பாலிமர்களும் நீக்கப்பட்டு வயலின் மட்டும் கிடைக்கிறது. இது கிட்டத்தட்ட ஸ்கிரீன் பிரிண்டிங் போன்றதே. மிக மிக குறைவான அளவு மற்றும் மிக மிக நுட்பமானது என்பதே வேறுபாடு. இந்த நுட்பமான முறைக்கு ஒரு பெரிய அறை அளவிலான கருவி தேவைப்படுகிறது. இது நானோபிரேசர் (NanoFrazor) எனும் செதுக்கு கருவியும் தூசி மற்றும் பிற துகள்களிலிருந்து அதை பாதுகாக்கும் உறையும் கொண்டது. நானோலித்தோகிராபி முறையானது பொருட்கள் ஒளி, காந்தம், மின்சாரம் போன்றவற்றிற்கு எவ்வாறு வினை புரிகின்றன என்பதை ஆய்வு செய்வதற்கு உதவுகிறது என்கிறார் இந்தப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாரிசன். இந்த முறைகள் மேம்படுத்தப்பட்டவுடன் அவை கணினி உட்பட பல்வேறு தொழில்நுணுக்கங்களில் தாக்கம் செலுத்தும். (சயின்ஸ் அலர்ட்)